மார்ச் 26-ம் தேதி மாலை 5 மணி. ஊரங்கு உத்தரவையொட்டி ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையிலுள்ள நொய்யல் சோதனைச் சாவடியில், சென்னிமலை போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த சரக்கு லாரி ஒன்றைச் சோதனை செய்யப்போன போலீஸார் அதிர்ந்துபோயிருக்கின்றனர். லாரியின் பின்பக்கம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனச் சுமார் 60 பேர், ஆடு – மாடுகளைப் போல உட்கார இடமின்றி அடைக்கப்பட்டு இருந்துள்ளனர். கண்ணில் பசியையும் முகத்தில் பயத்தையும் ஏந்தியபடி இருந்த அந்த மனிதர்கள், போலீஸாரிடம் சொன்ன கதைகள் பகீர் ரகம்.
`கையில் பணமும் இல்லை. அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடைகளும் இல்லை. எப்படி இந்த ஊரில் 21 நாளை சமாளிப்பது… என்ன ஆனாலும் சரி ஊருக்குப் போய்விடலாம்’ என எல்லோரும் முடிவெடுத்திருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை தாலுகா, எம்.குன்னத்தூரைச் சேர்ந்த 60 பேர் கட்டட வேலைக்காகக் கடந்த மாதம் கேரளாவிற்குச் சென்றிருக்கின்றனர். திருச்சூரில் வாடகை வீடு எடுத்து வேலை செய்துவந்த இவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த ஒரு வாரமாகவே வேலை இல்லாமல் இருந்திருக்கிறது. இதற்கிடையே இடியாய் வந்து இறங்கியிருக்கிறது பிரதமரின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு. ‘கையில் பணமும் இல்லை.
அத்தியாவசிய தேவைகளுக்குக் கடைகளும் இல்லை. எப்படி இந்த ஊரில் 21 நாளை சமாளிப்பது… என்ன ஆனாலும் சரி ஊருக்குப் போய்விடலாம்’ என எல்லோரும் முடிவெடுத்திருக்கின்றனர். 25-ம் தேதி இரவு 10 மணிக்கு திருச்சூரிலிருந்து கிளம்பியவர்கள் விடிய விடிய சுமார் 100 கி.மீ தூரம் நடந்தே, மறுநாள் காலை 6 மணிக்கு தமிழக – கேரள எல்லையான வாளையாருக்கு வந்துள்ளனர்.
கேரள எல்லையைத் தாண்டி வந்தவர்களால், தமிழகத்தினுள் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியவில்லை. ஆரம்பத்தில் 60 பேரையும் அனுமதிக்க மறுத்த தமிழக போலீஸார், மருத்துவ சோதனைகளுக்குப் பின்னரே தமிழகத்தினுள் அனுமதித்திருக்கின்றனர். அதன்பிறகும் பல கி.மீ தூரம் நடந்தே பயணித்தவர்களுக்கு, வழியில் இருந்த எந்த ஹோட்டலிலும் சாப்பாடு கிடைக்கவில்லை. நெகமம் அருகே ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போக, அங்கு வந்த போலீஸார் சாப்பிட விடாமல் விரட்டியிருக்கிறார். பசி மயக்கத்தில் மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு வழியில் வரமாய் ஒரு சரக்கு லாரி வந்திருக்கிறது. அந்த லாரியின் டிரைவர், அவர்களுடைய சொந்த ஊர் வேறு.

என்ன ஆனாலும் சரியென, எல்லோரையும் ஏற்றிக்கொண்டு லாரி கிளம்பியிருக்கிறது. வழியில் பல இடங்களில் போலீஸார் தடுத்து நிறுத்தி, மணிக்கணக்கில் விசாரணை செய்திருக்கின்றனர். இப்படி பல சிக்கல்களைத் தாண்டி கடைசியாக அந்த லாரி ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் செக்போஸ்ட்டிற்கு வந்திருக்கிறது. ஏற்கனவே தாய்லாந்து நாட்டினரால் ஈரோட்டில் கொரோனா பரவியிருக்கும் சூழலில், வெளிமாநிலத்தில் இருந்துவரும் உங்களை ஈரோட்டிற்குள் அனுமதிக்க முடியாதென சென்னிமலை போலீஸார் கைவிரித்திருக்கின்றனர். உடனே அருகிலிருந்து பத்திரிகையாளர்கள் சிலர் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு போன் அடித்து விஷயத்தைச் சொல்லியிருக்கின்றனர். உடனே ஒரு மெடிக்கல் டீமை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் ஏற்பாடு செய்து அனுப்ப, லாரியில் இருந்த 60 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் மாவட்டத்தில் நுழைய அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
அப்போது ‘ரெண்டு நாளா சரியா சாப்பிடலைங்க’ என அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் சிலர் கலங்கியிருக்கின்றனர். உடனே பெருந்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சேர்ந்து அவர்களுடைய சொந்த செலவில் 60 பேருக்கும் உணவு ஏற்பாடு செய்து வயிறார சாப்பிட வைத்திருக்கின்றனர். போலீஸாரே 60 பேருக்கும் சாப்பாடு பறிமாறியிருக்கின்றனர். பால் இன்றி தவித்த குழந்தைகளுக்கு, பெருந்துறை தனிப்பிரிவு போலீஸ் கோபால் வீட்டிலிருந்து பால் காய்ச்சி எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்.

பெருந்துறை போலீஸார் சிலர் பழம், பிஸ்கெட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். பெருந்துறை தாசில்தார் முத்துக்கிருஷ்ணனோ செலவிற்கு 3,000 ரூபார் கொடுத்து அனுப்பியிருக்கிறார். மேலும், அவர்களுடைய ஊர் வி.ஏ.ஓவிற்கு விஷயத்தைச் சொல்லி, வழியில் யாரும் தடுத்து நிறுத்தாதபடி ஏற்பாடு செய்து லாரியை அனுப்பியிருக்கின்றனர். பசி மயக்கத்திலும், ஊர் போய்ச் சேருவோமா என்ற பயத்திலும் இருந்தவர்கள் கண்ணீரோடு பத்திரிகையாளர்களுக்கும் போலீஸாருக்கும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கின்றனர்.
இதுகுறித்து கேரளாவிலிருந்து ஊருக்குத் திரும்பிய பொரப்பாத்தை என்பவரிடம் பேசினோம். “கொரோனா பாதிப்பால ஏற்கனவே 10 நாளா வேலை இல்லாம இருந்தோம். அப்படியிருக்க 21 நாளைக்கு ஊரடங்கு போட்டுட்டாங்க. கையில சுத்தமா காசு இல்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை. எப்படியாவது ஊர்க்கு போய் பொழைச்சுக்கலாம்னு குழந்தை குட்டிகளைத் தலையில தூக்கி வச்சிக்கிட்டு நடந்தே தமிழ்நாடு எல்லைக்கு வந்து சேர்ந்தோம்.

வழியில வந்த லாரி டிரைவர் எங்க ஊர்க்காரரு, அவர்கிட்ட நடந்தவிஷயத்தைச் சொல்லவும் லாரியில ஏத்திக்கிட்டாரு. வர்ற வழியில நிறைய போலீஸ் நிறுத்தி எச்சரிச்சு அனுப்புனாங்க. ஆனா, ஈரோட்டுக்குள்ள மட்டும் விட மாட்டேன்னு கறாரா சொல்லிட்டாங்க. எங்க நிலைமையை எடுத்துச் சொல்லி கண்ணீர் விட்டோம். அதுக்கப்புறம்தான் நிருபர்கள், போலீஸார் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு சாப்பாடு போட்டு பத்திரமா ஊருக்கு அனுப்பி வச்சாங்க. சொந்த ஊருக்கு வந்ததும்தான் உசுரே வந்துச்சு” என்றார்.