கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கல்லூரித் தேர்வுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலை அறிவியல், பொறியியல், ஆசிரியர் கல்வியியல் உள்ளிட்ட அனைத்து வித கல்வி நிறுவனங்களும் 31ஆம் தேதிவரை மூடப்படுவதாகவும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம்
அதன்படி மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நாட்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களில் கல்லூரி தேர்வுகள் ஏதும் திட்டமிடப்பட்டிருந்தால், அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படவே வாய்ப்புள்ளதாக உயர்கல்வித் துறை தகவல் அளித்துள்ளது.
இதில் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவு செய்யப்படுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் கலை அறிவியல் கல்லூரித் தேர்வுகள், ஏப்ரல் மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்களுக்கு எழுந்துள்ளது.
நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும்பட்சத்தில், கல்வி நிறுவனங்கள் இயங்குவதற்கான தடையும் நீட்டிக்கப்படலாம். எனவே, தேர்வுகளும் ஒத்திவைக்கப்படலாம் என்கின்றனர் அதிகாரிகள். எனினும், மத்திய மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே, அனைத்து விதமான கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், தேர்வுகள், தேர்வு முடிவுகள், விடைத்தாள் திருத்தும் பணிகள், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்திவைக்கப்படுகின்றனவா என்பது உறுதியாக தெரிய வரும் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM