டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தள்ளிவைக்கப்பட்டது பல அனுபவ வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரின் போது அவர்களின் உடல்தகுதி குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது.
ஓய்வின் விளிம்பில் உள்ள டைகர் வுட்ஸ், லின் டன், ஜஸ்டின் காட்லின் வீரர்கள் விடைபெறும் காலக் கட்டத்தில் புரியும் சாதனைகள் என்றுமே ரசிகர்களால் மறக்கப்படாது. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நீண்ட நாள் கனவாக இருந்த உலகக்கோப்பையை வென்று தன்னிறைவோடு ஒய்வு பெற்றார். இவரைப் போல மிகச் சிறப்பான முறையில் ஓய்வு பெறவே பல அனுபவ வீரர்கள் எண்ணுவார்கள்.
கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது, தாங்கள் கடைசியாகக் கலந்து கொள்ளும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலோடு இருந்த வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வயது என்பது என்றுமே ஒரு எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி வருபவர் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். இருபது கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பட்டம் வென்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் தங்கத்தை வசமாக்க வேண்டும் என்ற ஏக்கம் இன்று வரை இவருக்குத் தொடருகிறது. அடுத்தாண்டில் நாற்பது வயதை எட்டவிருக்கும் இவரின் திட்டங்கள், ஒலிம்பிக் தள்ளிப்போனதால் மாறியுள்ளன என்றே கூறவேண்டும்.
அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் டென்னிசில் கைப்பற்றாத மகுடங்கள் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக கிராண்ட் ஸ்லாம் போன்ற பெருந்தொடர்களில் பட்டம் வெல்லத் திணறி வருகிறார். அடுத்தாண்டில் நாற்பது அகவையை எட்டும் இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தை வெல்ல வேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில்’வெண்கலம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். அடுத்தாண்டு 38 அகவையைத் தொடவிருக்கும் இவர். தாயகத்தின் நீண்ட கால தாக்கத்தைத் தங்கம் வென்று தீர்க்க, உடல் தகுதி மிகவும் அவசியமாகும், ஒலிம்பிக்கில் ஆறு முறை தங்கப்பதக்கம் வென்ற ஒரே தடகள வீராங்கனை 34 வயதான அமெரிக்காவின் அல்லிஸன் பெலிக்ஸ். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர்கள் தவிர, பேட்மிண்டன் வீரர் லின் டன், கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் , மின்னல் வேக ஓட்டக்காரர் ஜஸ்டின் காட்லின் ஆகியோருக்கும் கடைசி ஒலிம்பிக்காக டோக்கியோ ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது. இவர்களது கனவுகளுக்கு கொரோனா தொற்று எதிர்பாராத ஒரு தடைக்கல்லாக அமைந்துவிட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM