கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும் அனல் மணலும் விரிந்து பரந்து கிடக்கும் அமானுஷ்ய தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள குட்டித்தீவு அரிச்சல்முனை.

அந்த தீவில்தான் பாக்யராஜை சந்தித்தோம். ஆளரவமற்ற தீவில்…நான்கு சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.

image

“என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?”- கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்… ”டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான் ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப் போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே!

image

 தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க. ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க. கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும் வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது. எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகளை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை ஜெயிச்சிருச்சு அண்ணே” என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.

image

“சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தன்னந்தனியாக இருக்க பயமாக இல்லையா?” என்று கேட்டோம்.

வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்…‘’அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே தனுஷ்கோடிதான். எங்களுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு…வெள்ளம்தான் தாய்ப்பாலு”. தனித்தீவில் கடை வைத்திருந்த பாக்யராஜே இவ்வளவு உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கும்போது… பாதுகாப்பாக வீட்டில், பாசமுள்ள குடும்பத்தினருடன் இருக்கும் நாம் அதைவிட உற்சாக உறுதியோடு இருப்போம்தானே!

கொரோனாவை அழிக்க தனிமையே ஆயுதம்!

– எம்.பி. உதயசூரியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.